வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!
இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலை நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.34.50 குறைந்து ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி ரூ.888.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த டிசம்பரில் ரூ.1,980-க்கு விற்பனை செய்து வந்த வணிக பயன்பாடு சிலிண்டர், தற்போது ரூ.201 வரை குறைந்து ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டில் மார்ச் மாதம் மட்டும் ரூ.5.50 அதிகரித்து இருந்தது. மற்ற மாதங்களில் விலை குறைந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.