" கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப கோரிக்கை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப கோரிக்கை வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலலின் செய்தியாளர்களை சந்தித்த பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"விழுப்புரம் மாவட்டம் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளது. புயல் சென்ற அனைத்து இடங்களிலும் வழக்கத்தைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது. புயல் அறிவிப்பு வெளியான உடனேயே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்துள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு 407 வீரர்களை உள்ளடைக்கிய 7 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள், 8 மாநில பேரிடர் குழுக்கள் என மொத்தமாக 15 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திற்கு 56 வீரர்களை கொண்ட 2 குழுக்களும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 30 வீரர்களை கொண்ட 1 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் 637 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் 147 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 மாவட்டங்களில் 7826 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால் 1,29,000 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு, மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். மேலும், விரிவான ஆய்வுக்கு பிறகே முழுமையான சேத விவரம் தெரிய வரும். ஃபெஞ்சல் புயல் சேதம் குறித்து விரைவில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்போம். மத்திய குழுவை உடனே அனுப்பும்படி மத்திய அரசிடம் கோர உள்ளோம்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.