#CycloneChido | மயோட்டே தீவை புரட்டிப்போட்ட புயல்... 11 பேர் பலி!
மயோட்டே தீவில் புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பெருங்கடலில் 'மயோட்டே' என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தீவு மடகாஸ்கர் நாட்டிற்கு அருகே அமைந்துள்ளது. மயோட்டே தீவில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள் தொகையாக கொண்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மயோட்டே தீவை 'சிண்டோ' என்ற புயல் தாக்கியது.
கனமழையுடன் வீசிய இந்தப் புயலால் மயோட்டோ தீவு பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர் கனமழையினால் தீவில் உள்ள பல வீடுகள், மின்கம்பங்கள், சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்தனர். இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. புயல் தாக்கிய மயோட்டே தீவிற்கு தேவையான நிவாரண உதவிகளை பிரான்ஸ் அரசு செய்து வருகிறது.
வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும, சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.