யாகி புயலால் தொடரும் உயிரிழப்புகள்... மியான்மரில் 74 பேர் பலி!
யாகி புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மியான்மரில் 74 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இந்த யாகி புயலால் வியட்நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை யாகி புயல் தாக்கியது.
மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாகக் கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது. வியட்நாமில் மட்டும் இந்த புயலால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து யாகி புயல் மியான்மரை தாக்கியது. புயலின் கனமழையால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகி உள்ளதாகவும், 80-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அங்கு மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
புயல்-வெள்ளம் காரணமாக சுமார் 2.40 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ளத்தால் 24 பாலங்கள், 375 பள்ளி கட்டிடங்கள், ஒரு புத்த மடாலயம், 5 அணைகள், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக ராணுவம் தெரிவித்தது.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கு வெளிநாடு உதவ வேண்டும் என்று ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கு வெளிநாடுகளைத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.