டிட்வா புயல் : இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 607ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். இது குறித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக உயர்ந்துள்ளது. மேலும் 214 பேரை காணவில்லை என்றும் பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது. புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், அண்டை நாடான இந்தியா முன்வந்துள்ளது. இலங்கையில் பேரிடரை முன்னிட்டு, இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், பேரிடரில் அதிகம் பாதிக்கப்பட்ட மத்திய மலைத்தொடர் (சென்ட்ரல் ஹில்ஸ்) பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், அங்கு நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ளதாக தேசிய கட்டுமான ஆராய்ச்சி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, வெளியான அறிக்கையில், "கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 150 மி.மீ. மழை பெய்திருப்பது பதிவாகியுள்ளது. எனவே, மழை நீடித்தால் நிலச்சரிவு அபாயத்தைத் தவிர்க்க அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறி சுமார் 2,25,000-க்கும் அதிகமான மக்கள் அரசின் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.