#Chennai அருகே நாளை கரையைக் கடக்கும் புயல் சின்னம் - 4 மாவட்டங்களுக்கு இன்று #RedAlert !
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை (அக். 17) அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், “தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளில் நேற்று (அக். 15) நிறைவு பெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (அக்.17) அதிகாலை கரையை கடக்கக்கூடும்.
அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் 130 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நாளை (அக். 17) வடமேற்கு மாவட்டங்களான திருப்பத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரையில், அடுத்துவரும் இரு தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். அக்.1 முதல் அக்.15 வரையிலான காலகட்டத்தில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தின் இயல்பான மழை அளவு 70 மில்லி மீட்டர்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.