ஆந்திராவில் கரையை கடந்தது 'மோன்தா' புயல்!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மோன்தா புயலாக வலுவடைந்தது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (அக்.28) காலை தீவிரப்புயலாக வலுப்பெற்றது. மோன்தா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் விடாமல் மழை கொட்டியது. ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று இரவு மழை குறைந்தது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் மசிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடாவின் தெற்கே, நர்சாபூருக்கு அருகே நள்ளிரவில் (நள்ளிரவு 11.30 - 12.30 மணிக்குள்) ‘மோன்தா’ புயல் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்ததை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.