'மிதிலி' புயல் வங்கதேச கடலோரப் பகுதிகளில் இன்றிரவு கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
மிதிலி புயல் இன்று இரவு வங்கதேச கடலோரப் பகுதிகளில் கெபுபாராவிற்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 17 ஆம் தேதியான இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் மிதிலி புயலானது ஒடிசா மாநிலம் பாராதீப்பிற்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 250 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் டிகாவிற்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 180 கிலோமீட்டர் தொலைவிலும், வங்கதேசம் கெபுபராவிற்கு தென் மேற்கு திசையில் 180 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
அதன் பிறகு, வடக்கு வடக்கிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வங்கதேசத்தின் கடலோரப் பகுதிகளில் கெபுபாராவிற்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், கரையை கடக்கும் பொழுது காற்றின் வேகமானது 60 கிலோமீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் என்றும், அவ்வப்போது 80 கிலோமீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.