“மிக்ஜாம்” புயல் பாதிப்பு: டிச. 11 அன்று மத்தியக்குழு தமிழ்நாடு வருகை!
மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழு திங்கள்கிழமை (டிச. 11) தமிழ்நாடு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதி கன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்புகுள்ளானது. மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப்போட்டுவிட்டது. உணவு, குடிநீர், பால், மின்சாரம், தகவல் தொடர்பின்றி மிகவும் வேதனைக்குள்ளாகினர்.
பாதிக்கப்பட்ட சென்னையில் புயல் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதுமிருந்து அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க கூடுதலான படகுகளும், தாழ்வான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மின் மோட்டார்களும் வரவழைக்கப்பட்டன.
தொடர்ச்சியாக நடந்த மீட்புப் பணியின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் இரு நாள்களாக துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகமும் சீராக்கப்பட்டது. ரயில்கள், பேருந்துகளின் இயல்பான தினசரி சேவையை நேற்று முந்தினம் (டிச. 7) தொடங்கியது. மழைநீர் தேக்கத்தால் பல இடங்களில் மூடப்பட்டிருந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பெரும்பாலானவை திறக்கப்பட்டன.
இந்நிலையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு திங்கள்கிழமை (டிச. 11) தமிழ்நாடு வருகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 2 நாட்கள் மத்திய குழு ஆய்வு மேற்கொள்கிறது. பின்னர் தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு மத்தியக்குழு டெல்லி செல்கிறது.
முன்னதாக ‘மிக்ஜம்’புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிச.7-ம் தேதியும், மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்றும் தமிழ்நாடு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.