"மிக்ஜாம்" புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி!
மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது. முன்னெச்சரிக்கையாக வட மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு தென் கிழக்கே 510 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது. முன்னெச்சரிக்கையாக வட மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4,000 முகாம்கள் தயார்நிலையில் உள்ளன. மழை காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 408 குடிசைகள் இடிந்துள்ளது. 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளது.
மழையினால் ஏற்படும் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். பயிர்கள் சேதமடைந்தால் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும். கால்நடை இழப்புக்கு அதிகபட்சமாக ரூ.30,000 வழங்கப்படும். குடிசை வீடுகளுக்கு ரூ.5,000 நிவாரணமாக வழங்கப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.