மிக்ஜாம் புயல் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்.. சென்னையில் நாளை இரவு வரை கனமழை நீடிக்கும்.. - வானிலை ஆய்வு மையம்!
மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக சென்னையில் மழை அதிகரித்து நாளை இரவு வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தில் அதன் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”கடந்த 24 மணி நேரத்தில் 32 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். இன்று திருவள்ளூர், தொடங்கி கடலூர் வரை பலத்த தரைக்காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்கக்கடல் வட தமிழக கடலோரப்பகுதிகள் தெற்கு ஆந்திரா கடலூர் பகுதிகளில் கொந்தளிப்புடன் கடல் காணப்படுகிறது. 5-ம் தேதி வரையிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பதிவான மழையின் அளவு 35 சென்டிமீட்டர். இயல்பான அளவைவிட 6% சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிர புயலாகவே மிக்ஜான் புயல் கரையை கடக்கும். கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் தான் மழை பொழிவிருக்கும். மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்.
நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புதுச்சேரி கடலோர பகுதிகளிலும் தரைகாற்று இருக்கும். படிப்படியாக சென்னையில் மழை அதிகரித்து நாளை இரவு வரை நீடிக்கும். காற்றும் அதே போல் தொடர்ந்து அதிகரித்து நாளை இரவு வரை வீசும். புயல் கடந்த 1-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை 18 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து, தற்பொழுது 5 முதல் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது.
வட தமிழகம், ஆந்திரப்பகுதிகளில் புயல் திரும்ப வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் படிப்படியாக மழை அதிகரிக்கும்.” இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.