ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதி | தமிழ்நாட்டிற்கு ரூ.944.80 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காக ரூ. 944.80 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கியது.
சமீபத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் அருகே புதுச்சேரியில் கரையை கடந்த பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பாதிப்புகளை சரி செய்ய தேவையான உதவி செய்யப்படும் என மத்திய அரசு கூறியது. ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (டிச. 6) சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு நாளை பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். மேலும், புதுச்சேரிக்கும் செல்ல உள்ளனர்.
இந்நிலையில், புயல் பாதிப்பு சீரமைப்பு பணிக்காக, மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.944.80 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய குழுவின் அறிக்கைக்கு பிறகு கூடுதல் நிதி வழங்கப்படும் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இதுவரை 28 மாநிலங்களுக்கு 21,718 கோடி விடுவித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உறுதியாக இருக்கும் எனவும் கூறியுள்ளது. புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.