ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது - அடுத்த 12மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்!
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நிலை கொண்ட நிலையில் மேலும் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கரையில் நேற்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கிய நிலையில் நேற்று இரவு 10.30 – 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் தற்போது புதுச்சேரி அருகே நிலை கொண்டுள்ள நிலையில் கடந்த 6 மணி நேரத்தில் சுமார் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளதாகவும் கடந்த 3 மணி நேரத்தில் (அதிகாலை 3-6 மணி வரை) பெரும்பாலும் நகராமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புயல் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 3மணி அளவில் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயலானது மேலும் வலுவிழக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிக கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 50 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 46 சென்டிமீட்டர் மழை பாதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 தேதி புதுச்சேரியில் 21 சென்டிமீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.