“மிதிலி புயல் வங்க தேசம் அருகே கரையை கடந்தது!” இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
வடமேற்கு வங்கக் கடலில் உருவான மிதிலி புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று (நவ. 16) ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமாா் 420 கி.மீ. கிழக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்தது. பின்னர் வங்கதேச கடற்கரையையொட்டி நகா்ந்து மோங்லா-கேப்பு பாராவு பகுதிகளுக்கு இடையே வடக்கு - வடகிழக்கு திசையில் நகா்ந்து இன்று (நவ. 17) புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு மிதிலி என மாலத்தீவு சார்பில் பெயரிடப்பட்டது.
பின்னர் வடக்கு-வடகிழக்கு திசையில் மிதிலி புயல் நகா்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நாளை (18-ந் தேதி) அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகா்ந்து மோங்லா-கேப்பு பாரா பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த மிதிலி புயல் வங்கதேசம் அருகே கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மிதிலி புயல் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.