‘CUET - UG’ தேர்வுக்கான விண்ணப்பம் தொடக்கம் - தேர்வு தேதி, பாடத்திட்டம் அறிவிப்பு!
CUET - UG நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும் ஜூன் 30-ம் தேதி தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2022- 23-ம் கல்வி ஆண்டு முதல் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
12ம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஆன்லைன் மூலம் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. 2024-ம் ஆண்டுக்கான CUET தேர்வு மே 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வின் முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று (பிப்.27) தொடங்கி மார்ச் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பாடத் திட்டம்: க்யூட் (CUET Syllabus) நுழைவுத் தேர்வுக்கு பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் அடிப்படையில் புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. மாணவர்களின் கல்வி அறிவு, விமர்சன சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் ஆகியவற்றைப் பரிசோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
CUET வினாத்தாள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவு மொழி தேர்வாகவும், இரண்டாவது பிரிவு பாடங்களுக்கான தேர்வாகவும், மூன்றாவது பிரிவு பொது திறனுக்கான தேர்வாகவும் இருக்கும். வெளிநாடுகளில் உள்ள 26 நகரங்கள் உள்பட மொத்தம் 380 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இத்தோ்வு நடத்தப்படவுள்ளது.