"வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கடலூருக்கு சென்றார். அங்கு அவர், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனுடன், அவர் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் நேற்று இரவு நெய்வேலி சுற்றுலா மாளிகையில் தங்கினார். முன்னதாக கடலூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பொதுமக்கள் முதலமைச்சருடன் கை குலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் பயணம் குறித்தும், மக்கள் அளித்த வரவேற்பு குறித்தும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்!
நலத்திட்ட உதவிகளோடு, முத்தான பத்து புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளேன்.
நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சரைத் தந்த மண்ணிலிருந்து, அநீதியின் ஒட்டுமொத்த உருவமாகத் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசின் அட்டூழியங்களை மக்கள் முன்… pic.twitter.com/sqtgrybU3N
— M.K.Stalin (@mkstalin) February 21, 2025
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்! நலத்திட்ட உதவிகளோடு, முத்தான பத்து புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளேன். நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சரைத் தந்த மண்ணிலிருந்து, அநீதியின் ஒட்டுமொத்த உருவமாகத் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசு குறித்து மக்கள் முன் பட்டியலிட்டேன்!" என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வேப்பூர் அருகே திருப்பெயர் கிராமத்தில் இன்று (பிப்.22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.