‘புல்லட் ராஜாவை’ மடக்க களமிறக்கப்பட்ட ‘விஜய்’... தொடரும் தேடுதல் பணி!
பந்தலூர் அருகே 50 குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்திய CT16 புல்லட் ராஜா யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார
பகுதிகளில் உள்ள 48க்கும் மேற்பட்ட வீடுகளை, CT16 புல்லட் ராஜா என்ற காட்டுயானை சேதம் செய்து, வீட்டில் உள்ள அரிசி, பருப்பு போன்ற பொருட்களை சாப்பிட்டு வருகிறது. இந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதை கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகளை வனத்துறையினர் கையாண்டு வருகின்றனர்.
ராஜேஷ் மற்றும் கலைவாணன் ஆகிய வன கால்நடை மருத்துவர்களை கொண்ட குழுவுடன் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் பணியாளர்கள், முதுமலையில் யானைகளை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் என 75க்கும் மேற்பட்ட ஊழியர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்ரோன் கேமரா, தெர்மல் ட்ரோன் கேமரா, இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் புல்லட் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வன ஊழியர்கள் இரவு, பகலாக
ஈடுபட்டு வருகின்றனர்.
கொளப்பள்ளி, அய்யங்கொல்லி இடையே மலவன்சேரம்பாடி என்ற பகுதியில் காட்டு
யானையின் நடமாட்டம் கண்டறியப்பட்டதால், பொம்மன் மற்றும் சீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் புல்லட் ராஜாவை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது பொம்மனுக்கு மதம்பிடித்து விட்டதால், அதற்கு பதிலாக விஜய் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
தற்போது விஜய் மற்றும் சீனிவாசனை வைத்து புல்லட் ராஜாவை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொளப்பள்ளியில் இருந்து அய்யன்கொல்லி செல்லும் சாலையில் போக்குவரத்தானது நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.