For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீலகிரியில் வீடுகளை சூரையாடிய புல்லட் ராஜா யானை- மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு!

01:01 PM Dec 26, 2024 IST | Web Editor
நீலகிரியில் வீடுகளை சூரையாடிய புல்லட் ராஜா யானை  மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு
Advertisement

நீலகிரி பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 48க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் CT 16 புல்லட் ராஜா என்ற யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக புல்லட் ராஜா என்ற யானை, குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை சேரங்கோடு பகுதியில் கடந்த சில வாரங்களாக 48க்கும் மேற்பட்ட வீடுகளை சேதம் செய்துள்ளது. தொடர்ந்து நேற்று (டிச. 25) இரவு மீண்டும் கொலப்பள்ளி பகுதியில் 3 குடியிருப்புகளை யானை இடித்து சேதப்படுத்தி வீட்டில் உள்ள அரிசி, பருப்பு போன்ற பொருட்களை சாப்பிட்டு வருகிறது.

இந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதை கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகளை வனத்துறையினர் கையாண்டு வருகின்றனர். 2 மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் பணியாளர்கள், முதுமலையில் யானைகளை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் போன்றோர் தயாராகியுள்ளனர். மேலும் ட்ரோன் கேமரா போன்றவற்றை இரவு நேரங்களில் யானை நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய கொண்டு வரப்பட்டுள்ளன.

முதுமலையிலிருந்து பொம்மன் மற்றும் சீனிவாசன் என்ற 2 கும்கி யானைகள் கொண்டு வரப்படவுள்ளன. யானையின் நடமாட்டம் தொடர்ச்சியாக ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வன ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் CT 16 புல்லட் ராஜா என்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புல்லட் ராஜா யானை தமிழக- கேரள ஆகிய இரு மாநில எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ளதால் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மயக்க ஊசி செலுத்தி பிடிபடும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதா அல்லது கும்கி பயிற்சி கொடுத்து முகாமில் பராமரிக்கப்படுமா என பின்னர் முடிவு செய்யப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement