#CSKvRCB : சிஎஸ்கே அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்களை ஆர்சிபி அணி குவித்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 22) தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசையுடன் இன்றைய ஆட்டம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியில் இதுவரை கேப்டனாக இருந்த தோனி இந்த போட்டியில் வீரராகவும், அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். தொடர்ந்து, பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
சென்னை அணியின் தீபக் சஹார் முதல் ஓவரின், முதல் பந்தினை வைய்டாக வீசினார் இந்த சீசனின் முதல் பவுண்டரியை ஃபாப் டூ பிளெசிஸ் விளாசினார். முதல் ஓவரில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து, பிளெசிஸ் 23 பந்தில் 35 ரன்கள் விளாசி தனது விக்கெட்டினை முஸ்தபிகுர் பந்தில் இழந்து வெளியேறினார். ரஜித் படிதார் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் இழந்தார்.
மேக்ஸ்வெல் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் தீபக் சஹார் பந்தில் இழந்து வெளியேறினார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி 12 ஆயிரத்து மூன்று ரன்கள் சேர்த்தார். இந்த சீசனின் முதல் சிக்ஸரை விராட் கோலி விளாசினார். 10 ஓவர்கள் முடிந்த போது பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 20 பந்தில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
சிறப்பாக விளையாடி வந்த கேமரூன் கிரீன் தனது விக்கெட்டினை 22 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் முஸ்தபிகுர் பந்தில் ஆட்டமிழந்தார். 18வது ஓவரில் பெங்களூரு அணி மூன்று சிக்ஸர்கள் விளாசியது. 18 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் குவித்துள்ளது. 19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது.
பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இதன் மூலம் 174 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.