#CSKvKKR : 8 பந்தில் 3 விக்கெட் எடுத்து அதிரடி காட்டிய ஜடேஜா... சிஎஸ்கே அணிக்கு 138 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024 தொடரின் இன்றைய தினத்தில் பந்து வீச்சில் சென்னை அணி அதிரடி காட்டியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக கொல்கத்தா அணியில் இருந்து பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். பந்து வீச்சாளர் தேஷ் பாண்டே தான் வீசிய முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து பில் சால்ட் விக்கெட்டை எடுத்து அசத்தினார்.
தொடர்ந்து, அதிரடியாக விளையாடி வந்த ரகுவன்ஷி 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் சுனில் நரைன் 20 பந்துகளில் 27 ரன்களுடன் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். 8வது வெங்கடேஷ் ஐயர் 3 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா பந்தில் வெளியேறினார். 11வது ஓவரில், அதிரடியாக ஆட முயன்ற ராமன்தீப் போல்ட் ஆனார்.
சென்னை அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத கொல்கத்தா அணி 15.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 16.4 ஓவரில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் 9 ரன்களில் ரிங்குசிங் போல்டானார். ஸ்ரேயாஸ் அய்யர் 32 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் உட்பட 34 ரன்கள் எடுத்த நிலையில், 19.1 ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து, ஸ்டார்க் டக் அவுட் ஆகி வெளியேறினார்.