சேப்பாக்கத்தில் கர்ஜித்த சிஎஸ்கே... ஹைதரபாத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களும், டேரில் மிட்செல் 52 ரன்களும் விளாசினர். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசரஸ் ஹைதரபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்கம் முதலே குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்த ஹைதரபாத் அணி ரன்களைக் குவிக்க முடியாமல் தடுமாறியது. ட்ராவிஸ் ஹெட் 13, அபிஷேக் ஷர்மா 15, அன்மோல்ப்ரீத் சிங் 0, எய்டன் மார்க்ரம் 32, நிதிஷ் குமார் 15, கிளாசன் 20 என ஹைதரபாத் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியாக 18.5 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே குவித்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையும் படியுங்கள் : “நாட்டின் அடுத்த பிரதமராக யார் இருந்தாலும் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!” – ப.சிதம்பரம் பேட்டி!
இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 54 பந்துகளில் 98 ரன்கள் விளாசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஹைதரபாத் அணியுடனான இந்த வெற்றியின்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.