சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகப்படியான வெள்ள நீர் புகுந்ததால் கடலில் கச்சா எண்ணெய் கலந்தது - சிபிசிஎல் விளக்கம்
எண்ணூர் கால்வாயில் கச்சா எண்ணெய் கலக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிபிசிஎல் நிறுவனம், சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய் கசிவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூழ்கிய நிலையில், வடசென்னை பகுதியில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. மேலும் எண்ணெய் படலங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் படர்ந்ததால் வீடுகள் முழுவதும் எண்ணெய் படலமானது.
மேலும் கடலில் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் கலந்துள்ளதாக கடலோர காவல்படை நடத்திய ஆய்வில் தெரியவிந்தது. இதனையடுத்து கடலில் பரவி உள்ள எண்ணெய் கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் (ஓ.எஸ்.டி) என்னும் எண்ணெய் கரைப்பானை கடலில் தெளித்தனர்.
இதனிடையே எண்ணெய் கசிவிற்கு யார் காரணம் என கண்டறிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் குழு ஒன்றை நியமித்தது. இந்த குழுவின் அறிக்கையின்படி எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கசிவு கலந்ததற்கு பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு(சிபிசிஎல்) நிறுவனமே காரணம் என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்தது. அதோடு சிபிசிஎல் நிறுவனத்திற்கு சில வழிகாட்டுதல்களையும் கொடுத்திருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஎல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக 36 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் சுத்திகரிப்பு நிலையத்தில் வெள்ளம் வந்ததாக தெரிவித்துள்ள சிபிசிஎல் நிறுவனம், வரலாறு காணாத வெள்ளத்தால் சுத்திகரிப்பு நிலையத்தின் அசுத்தமான மழைநீர் அமைப்புடன் வெள்ள நீர் கலந்ததாக குறிப்பிட்டுள்ளது.
கால்வாயின் மட்டம் சுமார் ஒரு மீட்டர் உயர்ந்ததால் பக்கிங்ஹாம் கால்வாயில் கச்சா எண்ணெய் கலந்ததாக தெரிவித்துள்ள சிபிசிஎல், சுத்திகரிப்பு ஆலையில் உள்ள குழாய்களில் கசிவு இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், எண்ணூர் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் படலங்கள் நவீன உபகரணங்கள் மூலம் அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சிபிசிஎல், எண்ணெய் படலத்தை மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அகற்ற தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
CPCL எடுத்த வரும் நடவடிக்கைகள்
1. சிற்றோடைக்கு அருகில் எண்ணெய் நழுவாமல் தடுக்க பூம்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது ஸ்கிம்மர்கள் மூலம் சேகரிக்கப்படும். சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம், காரைக்கால் துறைமுகம் மற்றும் உள்ளூர் கொள்முதல் ஆகியவற்றிலிருந்து அவசர கால அடிப்படையில் சுமார் 750 மீட்டர் பூம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2. எண்ணூர் சிற்றோடை பகுதியில் TNPCB வழிகாட்டுதலின் கீழ் எஜெக்டர்கள், கல்லி சக்கர்ஸ் (வெற்றிட வகை எண்ணெய் அகற்றும் வாகனங்கள்) இயக்கம் மற்றும் உயிர்ச் சிதறல்களை தெளித்தல் ஆகியவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
3. எண்ணூர் சிற்றோடை பகுதியில் சூடான இடங்களை அடையாளம் காண சுமார் 60 படகுகள் ஈடுபடுத்தப்பட்டு, உறிஞ்சும் திண்டுகளைப் பயன்படுத்தி எண்ணெய் அகற்றும் பணி டிச.09 முதல் தொடங்கியுள்ளது.
4. எண்ணூர் சிற்றோடையிலிருந்து எண்ணெயை அகற்றுவதற்காக CPCL ஒரு தொழில்முறை நிறுவனத்தை நியமித்துள்ளது.
5. ஜேசிபி, ஹைட்ராஸ், டிராக்டர் டிரெய்லர், டம்பர்கள் போன்றவற்றைக் கொண்டு 125-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் கரையோரப் பகுதியை இயந்திரத்தனமாக சுத்தம் செய்ய ஆதாரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
6. டிச.08 முதல், CPCL ஆல் எண்ணூர் க்ரீக் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இரண்டு நடமாடும் மருத்துவப் பிரிவுகள் பயன்படுத்தப்பட்டன (11.12.2023 வரையிலான பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 900 பேர்)
7. மாநிலத்தின் மண்டல மருத்துவ அதிகாரி கோரிய மருந்துகள் டிச.11 அன்று ஒப்படைக்கப்பட்டுள்ளன.
8. டிச.11-ம் தேதி, 3000 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் நோடல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேலும் 3,000 விநியோகிக்கப்பட்டுள்ளன.
9. பாதிக்கப்பட்ட பகுதிகளின் வீட்டை சுத்தம் செய்யும் பணி டிச.11 முதல் தொடர்கிறது.
CPCL-ன் அர்ப்பணிப்புக் குழு, அரசின் வழிகாட்டுதலின் கீழ் 24 மணி நேரமும் மேற்கூறிய செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது.