For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருப்பதியில் கூட்ட நெரிசல்... 6 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

07:31 AM Jan 09, 2025 IST | Web Editor
திருப்பதியில் கூட்ட நெரிசல்    6 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன    மாவட்ட ஆட்சியர் விளக்கம்
Advertisement

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான இலவச டோக்கன்கள் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

Advertisement

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இம்மாதம் பத்தாம் தேதி துவங்கி 19ஆம் தேதி வரை பத்து நாட்கள் சொர்க்கவாசல் திறந்து இருக்கும். சொர்க்கவாசல் பிரவேசம் செய்து, ஏழுமலையானை வழிபட தேவையான இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருப்பதியில் எட்டு இடங்களிலும், திருப்பதி மலையில் ஒரு இடத்திலும் தேவஸ்தான நிர்வாகம் கவுண்டர்களை திறந்தது.

அந்த கவுண்டர்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு துவங்கி, இம்மாதம் ஜன.10, 11, 12 ஆகிய நாட்களில் இலவச டோக்கன் வழங்கப்பட இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை வழங்கப்பட இருந்த டோக்கன்களை வாங்க, நேற்று மதியம் முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் குவிந்தனர். கூட்ட நெரிசல் அதிகமான நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாராலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

இச்சூழலில் திடீரென மெயின் கேட் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு உள்ளே செல்ல முயன்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் 1 பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருப்பதி மாவட்ட ஆட்சியர்
வெங்கடேஷ்வர்,

“பைராகிபட்டுடடையில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் பணியில் இருந்தவர்கள், மெயின் கேட்டை திடீரென்று திறந்து விட்ட காரணத்தால் பக்தர்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கேட்டை திறந்து விட்ட போலீஸ் டிஎஸ்பி மீது
நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் மொத்தம் 40 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் ஆறு பேர் மரணம் அடைந்து விட்டனர். மீதமுள்ள 34 பேரில் ஆறு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர். மரணம் அடைந்த ஆறு பேரில் சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் இருக்கிறார். மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது” என்று கூறினார்.

Tags :
Advertisement