பீட்சாவில் பசையை பயன்படுத்த சொன்ன கூகுள் ஏஐ... விமர்சனங்களுக்கு விளக்கமளித்த நிறுவனம்!
கூகுளின் AI ஓவர்வியூ மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் நகைச்சுவையின் அடிப்படையிலேயே பதில் அளிக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்த பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு கொண்டுள்ளன. அந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனமாக கூகுளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கூகுளின் AI ஓவர்வியூ பயன்பாட்டாளர்களிடையே பெரும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
நேற்று பயனர் ஒருவர் கூகுள் ஏஐ-யிடம், பீட்சாவில் சீஸ் ஒட்டவில்லை என கூறி அதற்கு தீர்வு கேட்டுள்ளார். அதற்கு நச்சுத்தன்மையற்ற பசையை உபயோகிக்க கூறி கூகுள் ஆலோசனை கூறியுள்ளது. இந்த பதில் இணையத்தில் வைரலாக கூகுள் ஏஐ ஓவர்வியூ மீது பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இதுபோன்று ஒரு நாளைக்கு ஒரு பாறையாவது மனிதர்கள் உண்ண வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தெரிவித்துள்ளது.
கூகுள் ஏஐ நன்றாக வேலை செய்வதாகவும், சில வினாக்களுக்கு மட்டுமே பயனர்கள் எதிர்பார்க்கும் பதில்கள் கிடைக்கவில்லை என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கூகுள் ஏஐ ஓவர்வியூவில் உள்ள சில கொள்கை மீறல்களும் கண்டறியப்பட்டு அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் விளக்கம் அளித்துள்ளது.