அதிபர் குறித்து விமர்சனம்... துண்டிக்கப்பட்ட பன்றி தலை, எலிகளின் உடல்களை அனுப்பி பிரபல பத்திரிக்கைக்கு மிரட்டல்!
1970களில் இருந்து இந்தோனேசியாவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமாக இருந்து வரும் டெம்போ என்ற வாராந்திர இதழ், அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் கொள்கைகளை விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பத்திரிக்கை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், தூய்மைப் பணியாளர்கள் தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆறு எலிகள் அடங்கிய பெட்டியைக் கண்டுபிடித்ததாக அந்த பத்திரிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் வியாழன்கிழமையன்று காதுகள் இல்லாத பன்றியின் தலையும் அங்குள்ள செய்தியாளருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட மிரட்டல் என அந்நாட்டின் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு குழுவின் திட்டத் தலைவர் பெஹ் லிஹ் யி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் பத்திரிகையாளராக இருப்பது “மரண தண்டனையைப் போல” மாறும் அபாயம் இருப்பதாகக் கூறி, இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல்-இன் இந்தோனேசியாவின் நிர்வாக இயக்குனர் உஸ்மான் ஹமீத் தெரிவித்துள்ளார்.
டெம்போவின் தலைமை ஆசிரியர் செட்ரி யஸ்ரா, “பயமுறுத்துவதே நோக்கம் என்றால், நாங்கள் பின்வாங்க மாட்டோம். ஆனால் இந்த கோழைத்தனமான செயலை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இவற்றை யார் அனுப்பினார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஹசன் நஸ்பி, “பத்திரிகை நிறுவனம் பன்றியின் தலையை “சமைக்க” வேண்டும்” என்று கூறியதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் இந்தோனேசியாவில் போராட்டத்தை தூண்டிய அந்நாட்டின் பட்ஜெட் உட்பட அதிபர் பிரபோவோவின் கொள்களைகளை விமர்சிக்கும் வகையில் கடந்த சில வாரங்களாக இந்த பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோவின் ஆட்சியின் கீழ் இரண்டு முறை இந்த பத்திரிக்கை தடை செய்யப்பட்டது.
1990களில் அவர் தோல்விக்கு பின் 1994 இல் மீண்டும் இந்த பத்திரிக்கை வெளியானது.