For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த விமர்சனம் - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில்!

10:08 PM Aug 07, 2024 IST | Web Editor
அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த விமர்சனம்   எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி ஆர் பி ராஜா பதில்
Advertisement

அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  விமர்சனம் செய்த நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில் அளித்துள்ளார்.  

Advertisement

இது குறித்து அவரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 6-8-2024 அன்று, தமிழ்நாட்டில் அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்த ஆதாரமற்ற, அடிப்படைப் புரிதல் இல்லாத, உள்நோக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் வரலாறு காணாத தொழில் வளர்ச்சியை தமிழ்நாடு கண்டு வரும் நிலையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், தமிழ்நாட்டின் பெருமைகளை உலகத்திற்குப் பறைசாற்றும் வேலையை எதிர்க்கட்சித்தலைவர் செய்திருக்க வேண்டும்.

மாறாக, நமது தொழில்முனைவோர்களையும், அயராமல் உழைத்து வரும் நமது தொழிலாளர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும், கட்சியில் தனது தற்காலிக பொதுச்செயலாளர் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மத்திய அரசின் குரலில் பேசி, தமிழர்களின் உண்மையான வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர் என்பதை நிரூபித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

2023-24ம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் அன்னிய முதலீடு குறைந்தபோதிலும், தமிழ்நாட்டில் 12.3% முதலீடுகள் அதிகரித்திருக்கின்றன.  எனினும், நேரடி அன்னிய முதலீடுகள் வளர்ச்சிக்கான முழுமையான குறியீடு இல்லை என்பதை தொடர்ந்து பல்வேறு நேரத்தில் பல்வேறு நிபுணர்களும், தொழில்துறை அமைச்சர் என்று முறையில் நானும், நமக்கு மிக அதிகமான முதலீடுகள் வந்தபோதிலும் கூறியிருக்கிறோம்.

இதற்கு காரணம், நிறுவனங்கள் தனது முதலீடுகளை ஒரு மாநிலத்திற்கு கொண்டு வந்து சேர்த்தாலும், அந்தக் கணக்கு அதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மாநிலத்தின் பெயரில் சென்றுவிடுகின்றன. எனவே, இதனை நிபுணர்கள் சரியானக் குறியீடாகக் கருதுவதில்லை.  இருப்பினும், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை உறுதி செய்து, 31 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கிரகிக்க முயற்சிக்க வேண்டும்.

2024 ஜனவரி 7,8 தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான குறைக் கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கையை உருவாக்கி வெளியிட்டார். மேலும், நாங்குநேரியைப் பொருத்தவரை, முரசொலி மாறன் பெருமுயற்சியில் தொழிற்பூங்கா திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை அதிமுக ஆட்சிக் காலம் முழுவதும் முற்றிலுமாகக் கிடப்பில் போடப்பட்டது.

அதை மீட்டெடுத்து கொண்டு வருகிறது திமுக அரசு. அதுபோல, ஒசூரில் முதன்முதலில் டி.வி.எஸ். நிறுவனத்தைக் கொண்டு போய் சேர்த்து, அங்கு தொழில்வளர்ச்சிக்கு வித்திட்டது திமுக தான்.  ஒசூருக்கு, புதிய விமான நிலையத்தையும் இன்று அறிவித்து, ஓசூர் 2.0 வளர்ச்சியை உறுதி செய்திருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஜவுளித்துறைக்காக 6% வட்டி மானியம் உள்ளிட்ட 500 கோடி ரூபாய்க்கு மேலான பல ஊக்கத்திட்டங்களை அறிவித்திருக்கிறது திமுக அரசு. ஆகையால்தான் 2021 முதல் 20,162.44 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஜவுளித் துறையில் மட்டும் வந்து குவிந்திருக்கின்றன. விரைவில், நவீனத் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவில் ஒரு புது சகாப்தம் உருவாக இருக்கிறது.

எத்தகைய முயற்சிகளையேனும் எடுத்து ஜவுளித் துறையில் பெரும் வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார். பி.எம்.மித்ரா பார்க் போன்ற ஜவுளிப் பூங்காக்களும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு வருகின்றன.  ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பயணங்கள் மூலம் மட்டும் 10,881.9 கோடி ரூபாய் முதலீடும், 17,371 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 31 லட்சம் நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி, பரலாக்கப்பட்ட வளர்ச்சியையும் உறுதி செய்து, தமிழ்நட்டிற்குத் தனித்துவம் மிக்க பெருமைகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு, வெகுவிரைவில் 1 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை எட்டுவது நிச்சயம்.  இனியேனும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கைகள் விடுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியைப் பார்த்து ஒரு தமிழனாகத் தாங்களும் பெருமை கொள்ளுங்கள்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement