For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்கு - எத்தனை பேர் மீது தெரியுமா?

10:16 AM Jun 12, 2024 IST | Web Editor
மத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்கு   எத்தனை பேர் மீது தெரியுமா
Advertisement

பிரதமர் மோடியுடன் பதவியேற்றுக் கொண்ட 71 அமைச்சா்களில் 28 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகவும்,  70 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனவும்  ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் கடந்த  9 ம் தேதி டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது.   பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  அவருடன் சேர்ந்து 71 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் 71 அமைச்சா்களில் 28 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகவும்,  70 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி,  அவர்களில் 19 பேர் மீது கொலை முயற்சி,  ஆள்கடத்தல்,  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.  இதில் மத்திய துறைமுகங்கள் துறை இணையமைச்சா் சாந்தனு தாக்கூா்,  மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் ஆகியோா் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெறுப்புணா்வு பேச்சு வழக்குகள் உள்ளன.

மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் ஜுவல் ஓரம், மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா்,  மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி ஆகியோா் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா,  அந்த துறை இணையமைச்சா்கள் பண்டி சஞ்சய் குமாா்,  நித்யானந்த் ராய்,  மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்,  மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங், மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே ஆகியோா் மீது வெறுப்புணா்வு பேச்சு வழக்குகள் உள்ளன.

அதேபோல் 71 அமைச்சா்களில் 70 போ் கோடீஸ்வரா்கள்.  அவா்களில் 6 பேருக்கு ரூ.100 கோடிக்கும் மேலாகச் சொத்துகள் உள்ளன.  இதில் மத்திய ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் சந்திரசேகரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.5,705 கோடி.  மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ரூ.424 கோடி சொத்துகளும்,  மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமிக்கு ரூ.217 கோடி சொத்துகளும் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மக்களவைத் தோ்தலின்போது அமைச்சா்கள் வேட்புமனுவுடன் சமா்ப்பித்த பிரமாணப் பத்திரத்தை ஆதாரமாக கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக ஏடிஆா் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement