இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன - அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு!
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் தெரிவித்துள்ளார்.
சமீபகாலாமாக இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான மதமாற்றத் தடைச் சட்டம், வெறுப்புப் பேச்சு, அவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையை வெளியிட்டுப் பேசிய ப்ளிங்கென் தெரிவித்ததாவது..
” இந்தியாவில், சிறுபான்மையினரின் மதச் சுதந்திரம் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், உலகெங்கிலும் மக்கள் மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர். இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் சில மாநிலங்களில் திருமணத்திற்காக மதமாற்றம் செய்வதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் இந்தியாவில் உள்ள மதச் சுதந்திரக் குறைபாடுகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு, வன்முறைகளில் இருந்து சிறுபான்மையினரைப் பாதுகாப்பது, சிறுபான்மையினருக்கு எதிராகக் குற்றங்களை விசாரிப்பது, சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது குறித்த விஷயங்களில் சில சிறுபான்மைக் குழுக்கள் நமது அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதங்களுக்குத் தனி சட்டம் இருப்பதை மாற்றி பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பிரதமர் மோடியின் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இஸ்லாம், சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பழங்குடியின மக்களும், சில மாநில அரசுகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக மாற்றுவதற்கான முயற்சியாக இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர் “ என வெளியுறவுத்துறை ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அறிக்கையை வரவேற்றுள்ள இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்தியாவின் மதச் சுதந்திர நிலைமையைக் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.