#Crime | உத்தரப்பிரதேச பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி! நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவத்தில் 5 பேர் கைது!
உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகூடத்தின் வருவாய் அதிகரிக்க வேண்டி, 2-ஆம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில், பள்ளி இயக்குநர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் ஒருவன், நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஸ்கவானில் உள்ள டிஎல் பப்ளிக் பள்ளி, மாபெரும் வெற்றி பெற்று நல்ல வருமானம் ஈட்ட வேண்டும் என கோரி, இந்த வார தொடக்கத்தில் அந்த மாணவன் பள்ளி விடுதியில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் பள்ளியின் இயக்குநர், அவரது தந்தை மற்றும் மூன்று ஆசிரியர்கள் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, “குற்றம் சாட்டப்பட்டவர் பள்ளிக்கு வெளியே உள்ள குழாய் கிணறு அருகே சிறுவனைக் கொல்ல விரும்ப திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், அந்த கும்பல் விடுதியில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும்போது, சிறுவன் கத்த ஆரம்பித்தால், அப்போது அந்த கும்பல் கழுத்தை நெறித்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளான்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது பள்ளிக்கு அருகில், மாந்திரீகம் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நிதி நெருக்கடியில் இருந்த பள்ளியின் செழிப்பை உறுதி செய்வதே கொலையின் பின்னணியில் கூறப்படும் நோக்கம் எனவும். நரபலி கொடுப்பது பள்ளியின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் நம்பினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு செப்டம்பர் 6 ஆம் தேதி சிறுவனை நரபலி கொடுக்க முயன்றதும், ஆனால் அந்த முயற்சி தோல்வியுற்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாணவனின் தந்தை கிரிஷன் குஷ்வாஹா அளித்த புகாரின்படி, தனது மகன் நோய்வாய்ப்பட்டிருப்பதாக பள்ளி நிர்வாகத்திடம் இருந்து அவருக்கு திங்கள்கிழமை அழைப்பு வந்துள்ளது. குஷ்வாஹா பள்ளியை அடைந்ததும், பள்ளி இயக்குனர் தனது மகனை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, குழந்தையின் உடல்நிலை மோசமாகி விட்டது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்" என்றார்கள். நாங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தோம், ஆனால் அவர்கள் காரை நிறுத்தவில்லை. ஒருவழியாக சதாபாத்தில் காரை துரத்தி பிடித்தோம், அங்கு அவர்களது காரில் உயிரிழந்த நிலையில் குழந்தையின் உடலை கண்டெடுத்தோம்” என தெரிவித்துள்ளார்.