விராட் கோலியை யாரும் மிஞ்ச முடியாது - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ்!
நான் என்னுடைய வாழ்நாளில் எவ்வளவோ திறமையான கிரிக்கெட் வீரர்களை பார்த்திருக்கிறேன். அவர்களில் யாரும் விராட் கோலியை மிஞ்ச முடியாது என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய வீரர் விராட் கோலி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்கள் எடுத்திருந்தார் சச்சின். தென் ஆப்பிரிக்கா அணியுடன் தனது ஒரு நாள் போட்டியின் 49வது சதத்தை நிறைவு செய்த விராட் கோலி அந்த சாதனையை சமன் செய்திருக்கிறார். பலரும் விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்துடன் இணைந்து பேசிவருகின்றனர்.
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது விவ் ரிச்சர்ட்ஸை சந்தித்து உரையாடினார் விராட் கோலி. இதனைத்தொடர்ந்து தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணையதளத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தது தொடர்பாக அவரை வெகுவாக பாராட்டி கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார் ரிச்சர்ட்ஸ்.அதில் “நான் என்னுடைய வாழ்நாளில் எவ்வளவோ திறமையான கிரிக்கெட் வீரர்களை பார்த்திருக்கிறேன். அவர்களில் யாரும் விராட் கோலியை மிஞ்ச முடியாது. நான் நீண்ட காலமாகவே விராட் கோலியின் ரசிகனாக இருந்து வருகிறேன். அவர் சச்சின் டெண்டுல்கரை போல எல்லா காலங்களுக்குமான சிறந்த வீரராக தன்னை நிரூபித்துக் கொண்டே வருகிறார்”என எழுதியுள்ளார்.
மேலும் விராட் கோலி குறித்து எழுதிய ரிச்சர்ட்ஸ் ”கடந்த சில காலங்களாகவே விராட் கோலியை என்னுடன் ஒப்பிட்டு வருகின்றனர். அதற்கு அவரது ஆக்ரோஷமான ஆட்டமும் கள செயல்பாடும் காரணமாக அமைந்திருக்கிறது. அவர் ஆடுகளத்தில் எப்போதும் தீவிரமாக ஆட்டத்துடன் இணைந்து இருக்கிறார். ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியும் விளையாட்டோடு இணைந்து இருக்கும் விராட் கோலி போன்ற வீரர்களை நான் என்றும் பாராட்ட தவறியதில்லை” என எழுதியுள்ளார்.