மொஹாலியில் உள்ள மருத்துவமனைக்கு கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் ரூ. 35 லட்சம் நன்கொடை!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக சர்வ தேச போட்டிகளில் அறிமுகமாகி தற்போது ஒருநாள் போட்டியில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். அதற்கு முன்பு இவர் உள்ளூர் அணிகளில் விளையாடியுள்ளார். நடப்பு ஐபில் தொடருக்கான குஜராத் அணியில் கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மொஹாலியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் ரூ. 35 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். நன்கொடையில் வென்டிலேட்டர்கள், சிரிஞ்ச் பம்புகள், ஓடி மேசைகள், சீலிங் லைட்டுகள், ஐசியு படுக்கைகள் மற்றும் எக்ஸ்ரே இயந்திரங்கள் போன்ற முக்கியமான உபகரணங்கள் அடங்கும் . இந்த நன்கொடை மருத்துவமனை நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெரிதும் உதவும் என்று அங்குள்ள சிவில் சர்ஜன் டாக்டர் சங்கீதா ஜெயின் கூறினார்.
மொஹாலிக்கும் சுப்மன் கில்-க்கும் உள்ள தொடர்பு குறித்து முந்தைய பேட்டிகளில் அவர், இளம் வயதில் தான் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்ததாகவும், அங்கு வீடு கட்டி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இன்றைய ஐபிஎல் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி மும்பை அணியை எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.