சிலிண்டர் டெலிவரி செய்யும் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை - இணையத்தில் வீடியோ வைரல்.!
கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை சிலிண்டர் டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள 26 வயதான ரிங்கு சிங் அதிரடியாக ஆடி தனக்கென தனி ரசிகர்களை வைத்திருப்பவர். உத்திரபிரதேசத்தை சேர்ந்த வீரரான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக அறிமுகமாகி இதுவரை 31 போட்டிகளில் விளையாடி 725 ரன்கள் குவித்துள்ளார்.
அதேபோல கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங்கின் ஆட்டம் பலரது மத்தியிலும் பரவலாக பேசப்பட்டது. இவரது அதிரடி ஆட்டத்தின் பலனாக கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய ரிங்கு சிங் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். டி20 போட்டிகளில் பினிஷராக பார்க்கப்படும் ரிங்கு சிங் கிட்டத்தட்ட 15 போட்டிகளில் 89 ரன்கள் சராசரியுடன் 356 ரன்கள் குவித்துள்ளார்.
ஐபிஎல் 20 போட்டியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியிலும் சிறப்பாக விளையாடி வரும் ரிங்கு சிங் குறித்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரிங்கு சிங்கின் தந்தை சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தந்தையே பழைய தொழிலை மறக்காமல் தொடர்ந்து அதனை செய்து வருகிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒருமுறை ஐபிஎல் தொடரின் போது ரிங்கு சிங் அளித்த பேட்டியில் ” நான் ஐபிஎல் தொடரில் தேர்வாகி எனக்கு சம்பளம் கிடைத்த பிறகு எனது தந்தையை ஓய்வு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினேன். ஆனால் அவர் இப்போதும் வேலை செய்வேன் என பிடிவாதமாக உள்ளார். அவர் வேலை செய்து பழகி விட்டதால் வாழ்க்கை முழுக்க இந்த வேலையை செய்யப்போவதாக எனது தந்தை தெரிவித்துள்ளார்” என ரிங்கு சிங் கூறியிருந்தார்.
ரிங்கு சிங் தெரிவித்ததைப் போலவே தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் ரிங்கு சிங்கின் தந்தை சிலிண்டர் டெலிவரி செய்கிறார் என பதிவிட்டு பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.