இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் ஜூன் 2-ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
எனவே, இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியுள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 13-ம் தேதி பிசிசிஐ அழைப்பு விடுத்தது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் (மே 27) முடிவடைந்தது.
இந்நிலையில், பிசிசிஐ 3,000 -க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி போன்ற பிரபலங்களின் பெயரில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூகுள் ஃபார்ம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், அதிகளவில் போலி விண்ணப்பங்கள் அனுப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலனவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலமானவவர்கள் பெயர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி, ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களில் பல விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற அரசியல்வாதிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இதனால், பெரும் குழப்பம் அடைந்துள்ள பிசிசிஐ அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இதில் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு உண்மையில் ஆர்வமுள்ளவர்கள் யார் என்று தெளிவாக தெரியவில்லை என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி விண்ணப்பதாரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் சமாளிப்பது இது முதல் முறை அல்ல. இதேபோல், 2022-ம் ஆண்டில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்போது, பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி சுமார் 5,000 விண்ணப்பங்கள் வந்தன.