சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் 7-ம் ஆண்டாக நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அணி வெற்றி பெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையிலான உறவை
வலுப்படுத்தும் வகையில், நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து 7-ம் ஆண்டாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜன.20) நடைபெற்றது.
இப்போட்டியில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா தலைமையிலான அணியும், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமையிலான அணியும் களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று வழக்கறிஞர் அணியினர் பேட்டிங் செய்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முதன்முதலாக கிரிக்கெட் விளையாடி அசத்தினார்.
வழக்கமான நீதிமன்ற பணிகளுக்கு நடுவே நடந்த இந்த கிரிக்கெட் போட்டி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், நீதிபதிகள் - வழக்கறிஞர்களுக்கு இடையே நல்லுணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பாக இருப்பதாக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: அயோத்தி வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு!
தலைமை நீதிபதி தலைமையிலான அணியில் நீதிபதிகள் வைத்தியநாதன், அப்துல் குத்தூஸ், எம்.எஸ்.ரமேஷ், சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும், வழக்கறிஞர் அணியில் மூத்த வழக்கறிஞர்கள் ரமேஷ், பாஸ்கர், சுரேஷ்குமார், ராஜசேகர் உள்ளிட்ட பலரும் பங்கேற்று விளையாடினர். மேலும் இந்த கிரிக்கெட் போட்டியை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் குடும்பத்தினர் கண்டு மகிழ்ந்தனர்.
முதலில் பேட்டிங் செய்த வழக்கறிஞர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 164 ரன்கள் எடுத்தனர். பின்னர் இரண்டாவதாக பேட்டிங் செய்த நீதிபதிகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 56 ரன்கள் வித்தியாசத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அணி வெற்றி பெற்றது.