"கிரிக்கெட் தான் எல்லாமே...கிரிக்கெட் இல்லை என்றால் எதுவுமே இல்லை" - ஹர்மன்ப்ரீத் கௌர்!
கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறது, கிரிக்கெட் இல்லை என்றால் நான் எதுவுமே இல்லை என இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (ஜூலை 23) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் விளையாடின. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது.179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
இதனையடுத்து இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை வழிநடத்தினார். இந்த நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் நேர்காணலில் கூறியதாவது, "கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறது. கிரிக்கெட் இல்லை என்றால் நான் எதுவுமே இல்லை.
கிரிக்கெட் எனக்கு அளித்த பெயர்போல வெறெதுவும் எனக்கு அளிக்கவில்லை. அதனால் கிரிக்கெட் எனக்கு கடவுள். முதல்முறையாக இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்தபோது அதை பெற்றோர்களுக்கு அனுப்புவதா அல்லது கிரிக்கெட் கற்றுக்கொடுத்த பயிற்சியாளருக்கு அனுப்புவதா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் இருவர்களுமே எனக்கு சமமானவர்கள்" என்றார்.