புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விரிசல் என கிராம சபை கூட்டத்தில் புகார்- மாவட்ட ஆட்சியர் உடனடி ஆய்வு!
செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கழுக்குன்றத்தை அடுத்த வள்ளிபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். வள்ளிபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் முடிக்கப்பட்ட பணிகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இவற்றையெல்லாம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து வள்ளிபுரத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை 15 வது நிதிக்குழு மானியத்தில் இருந்து நலவாழ்வு மையம் கட்டபட்டுள்ளது. இந்த நிலையில் நலவாழ்வு மைய கட்டிடம் தரமற்ற முறையில் இருப்பதால் அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
அதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கட்டிடத்தை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு விரிசலை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா பார்த்தசாரதி மற்றும் அனைத்து துறை சார்ந்த
அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.