For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக பக்கவிளைவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

10:00 AM May 01, 2024 IST | Web Editor
கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக பக்கவிளைவு  வெளியான அதிர்ச்சித் தகவல்
Advertisement

கொரோனா காலத்தில் இந்தியாவில் பலரும் போட்டுக் கொண்ட கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கி,  உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 5,33,586 பேர் பலியாகினர்.  மொத்தம் மூன்று அலையாக பரவிய கொரோனா வைரஸால் இதுவரை தமிழ்நாட்டில் 36,11,852 பேர் பாதிக்கப்பட்டு,  38,086 பேர் உயிரிழந்தனர்.

இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்க ஒட்டுமொத்த மருத்துவ துறையுமே போராடியது. இறுதியில் கோவாக்சின்,  கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி,  நோவாக்ஸ்,  பைஃசர் என பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதில் இந்தியாவில் கோவாக்சின்,  கோவிஷீல்டு மருந்துகள் தான் அதிகம் போடப்பட்டது.

இதையும் படியுங்கள் :“இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்” – கொடைக்கானல் மக்கள் கோரிக்கை!

முன்னதாக,  கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும்,  சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு மத்திய சுகாதார துறை மறுப்புத் தெரிவித்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள்,  தீவிர பாதிப்புகள் ஏற்பட்டதாக லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் 51 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளன.  அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் 'இந்தத் தடுப்பூசியின் பக்க விளைவால் பக்கவாதம்,  மூளை பாதிப்பு,  மாரடைப்பு,  நூரையீரல் ரத்தம் உறைதல் உள்ளிட்டவை ஏற்படுகிறது.  எனவே, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

இதையடுத்து,  லண்டன் உயர்நீதிமன்றத்தில் தடுப்பூசி தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அஸ்ட்ராசெனகா நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கை 'தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகையில் வெளியாகியுள்ளது.  அதில், 'ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் (கோவிஷீல்டு) மிகவும் அரிதான பக்க விளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம்.

இதற்கான காரணம் தெரியவரவில்லை.  இந்தத் தடுப்பூசி பயன்படுத்தாதவர்களுக்கும்,  பிற தடுப்பூசியைப் பயன்படுத்தியவர்களுக்கும் கூட ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  ஒரு நபருக்கு எதனால் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது என்பதை மருத்துவப்பூர்மாக நிபுணர்கள் ஆய்வு செய்தால் மட்டுமே சரியான காரணத்தைக் கண்டறிய வாய்ப்புள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement