“நாடாளுமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் மீதான கோவிட் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” - சபாநாயகருக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம்!
“பத்திரிக்கையாளர்கள் நாடாளுமன்றத்தை அணுகுவதைத் தடுப்பது அவர்களின் தொழில்சார் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பது எனவே கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் மீதான கோவிட் கட்டுப்பாடுகள் குறித்து விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“நாடாளுமன்ற நடவடிக்கைகளைச் சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பான முக்கியமான விஷயத்தை கவனத்திற்குக் கொண்டுவரவே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.
செய்தியின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதன் மூலம், மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்துவதற்கு நமது ஜனநாயகத்தில் பத்திரிகைகள் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். பத்தாண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் செய்திகளை சேகரித்து வரும் பல ஊடகவியலாளர்கள், இப்போது கோவிட்-19 நெறிமுறைகள் என்ற பெயரில் தேவையற்ற கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
பல ஆண்டுகளாக அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் நாடாளுமன்ற நடைமுறைகளை பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தை அணுகுவதைத் தடுப்பது அவர்களின் தொழில்சார் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பது மட்டுமின்றி, பொதுமக்களுக்குத் துல்லியமான தகவல் செல்வதையும் கட்டுப்படுத்துகிறது.
தற்போதைய கட்டுப்பாடுகளை தயவுசெய்து மறுபரிசீலனை செய்து, அனைத்து அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களையும் முழுமையாக நாடாளுமன்றத்தை அணுக அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய நடவடிக்கை சுதந்திரமான பத்திரிகைக்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் மற்றும் நமது ஜனநாயகம் வலுவானதாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்யும்.
உங்கள் தலைமையின் கீழ் நாடாளுமன்றம், ஜனநாயகக் கோட்பாடுகளின் தரத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் என நம்புகிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.