#Covai | ஆன்லைன் செயலி மூலம் ரூ.9 லட்சம் மோசடி- ரூ.3 கோடிக்கு மேல் தில்லுமுல்லு செய்த ராஜஸ்தான் கும்பல் கைது!
கோவையில் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் லிங்க் அனுப்பி ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்த ராஜஸ்தான் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்துள்ளார். அதில் வந்த லிங்கை கிளிக் செய்து Bain என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் தனது வங்கி விவரங்களை பதிவு செய்து 9 லட்சத்து 8 ஆயிரத்து 100 ரூபாயை செயலியில் முதலீடு செய்துள்ளார். பின்னர் அந்த செயலில் ரூ.32 லட்சம் பாக்கி காட்டியுள்ளது. இந்நிலையில் அந்த பணத்தை எடுக்க முயற்சித்த ராமசாமியை, மேலும் பணம் செலுத்த வேண்டும் என செயலியில் கூறப்பட்டது.
இதனால் சந்தேகமடைந்த ராமசாமி, கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜஸ்தான் ஜோத்பூரைச் சேர்ந்த சத்ய நாராயண், கிஷன் சௌத்ரி, சுனில் சரண் மற்றும் சந்தீப் குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4 மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள் மற்றும் 4 வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் இந்த 4 பேரும் பல்வேறு வங்கிகளில், 11 வங்கிக் கணக்குகள் வைத்துக்கொண்டு, ராமசாமியின் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 லட்சத்து 59 ஆயிரத்து 650 ரூபாய் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட ராமசாமிக்கு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலின் வங்கி கணக்கில் ரூ.3 கோடிக்கும் மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.