கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது :
“2014-ல் நரேந்திர மோடி முதன்முறையாக பிரதமரான போது, நாடு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தது. அதன்பின்னர் பாஜக அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து பகுதி மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான வளர்ச்சி என்பதே மத்திய அரசின் நோக்கம்.பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. வளர்ச்சிப் பாதையில் நாடு வெற்றிநடை போடுவதால் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள். நாட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகள் மூலம் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்கப்பட்டுள்ளனர். வாரிசு அரசியல் மற்றும் ஊழல் ஒழிப்பு வெளிப்படையாக பின்பற்றப்பட்டு வருகிறது. 2047-ல் புதிய இந்தியா படைப்போம்.
11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது. 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.