2023ம் ஆண்டில் அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி செலவிட்டுள்ள உலக நாடுகள்!
கடந்த 2023ம் ஆண்டு உலக நாடுகள் அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி (இந்திய மதிப்பில்) வரை செலவு செய்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் சில கடந்த 2023-ம் ஆண்டில் அணு ஆயுதத்திற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 7.6 லட்சம் கோடி வரை செலவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, சீனா, பிரான்ஸ், இஸ்ரேல், வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அணு ஆயுதத்திற்காக இவ்வாறான தொகையை செலவிட்டதாக சர்வதேச அணு ஆயுத ஒழிப்புக் குழு (ICAN) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் ஒரு நிமிடத்திற்கு ரூ.1.4 கோடியும், ஒரு நொடிக்கு ரூ.2.4 லட்சமும் உலக நாடுகள் செலவிடுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத் தொகையில் அதிகபட்சமாக அமெரிக்கா ரூ.4 லட்சம் கோடி வரை அணு ஆயுதத்திற்கு செலவு செய்ததாகவும், இது மற்ற அனைத்து நாடுகளின் மொத்தத் தொகையை விட அதிகம் என்றும், கடந்தாண்டு மட்டும் அணு ஆயுதத்திற்கான செலவை அமெரிக்கா 80% அதிகப்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் இங்கிலாந்து சென்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
அமெரிக்காவிற்கு அடுத்ததாக சீனா ரூ.1 லட்சம் கோடி வரை ஒதுக்கியுள்ளதாகவும், அதற்கடுத்து ரஷ்யாவும், பிரிட்டனும் தோராயமாக ரூ.70 ஆயிரம் கோடி வரை ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியா ரூ.19 ஆயிரம் கோடி வரை அணு ஆயுதத்திற்கு செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ரூ.7.5 ஆயிரம் கோடி வரை செலவிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், அணு ஆயுதத்திற்காக உலக நாடுகளால் ரூ.32 லட்சம் கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக (ICAN) தெரிவிக்கிறது. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் 9 நாடுகளும் நவீனமயமாக்கப்பட்டு வருவதால் அணு ஆயுதத்திற்கான செலவுகளையும் அதிகப்படுத்தி வருகின்றனர்.