சிக்கிம், அருணாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...
அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் முக்கியமான மாநிலங்களில் சிக்கிம் மற்றும் அருணாச்சலபிரதேசம் தவிர்க்க முடியாத மாநிலங்கள் ஆகும். நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் இணைந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அருணாச்சல பிரதேசத்தைப் பொறுத்தவரை அந்த மாநிலத்தில் ஏற்கனவே பா.ஜ.க. வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதனால், அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் எஞ்சிய 50 தொகுதிகளுக்கான உறுப்பினர்கள் யார் என்பதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், இந்த இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.