கொரோனாவால் மக்களின் சராசரி ஆயுள் காலம் குறைந்தது - உலக சுகாதார அமைப்பு!
வெறும் இரண்டு ஆண்டுகளில், கொரோனா தொற்று ஒரு தசாப்த கால ஆயுட்கால ஆதாயங்களை அழித்துவிட்டது என WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. சிங்கப்பூரில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், "வெறும் இரண்டு ஆண்டுகளில், கொரோனா தொற்று ஒரு தசாப்த கால ஆயுட்கால ஆதாயங்களை அழித்துவிட்டது" என WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது, "2019 மற்றும் 2021 க்கு இடையில், உலகளாவிய ஆயுட்காலம் 1.8 ஆண்டுகள் குறைந்து 71.4 ஆண்டுகள் ஆக உள்ளது. அதே நேரத்தில் ஆரோக்கியமான ஆயுட்காலம் 1.5 ஆண்டுகள் குறைந்து 61.9 ஆண்டுகள் ஆக உள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் ஆயுட்காலம் சுமார் 3 ஆண்டுகள் குறைந்துள்ளது.
கொரோனா தொற்று இறப்புக்கான முக்கிய காரணமாக இருந்தது. இதனால் கிட்டத்தட்ட 13 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளர். மேலும் இதய நோய், பக்கவாதம், புற்றுநோய்கள், நுரையீரல் நோய், அல்சைமர் நோய், நீரிழிவு நோய் போன்ற தொற்றாத நோய்கள் 74% உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கொரோனா தொற்று காலகட்டத்தில் கூட 78% உயிரிழப்புகள் இதுபோன்ற தொற்றாத நோய்களால் ஏற்பட்டன.
2022 ஆம் ஆண்டில், 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 1 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் அரை பில்லியனுக்கும் அதிகமானோர் எடை குறைவாக இருந்தனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 148 மில்லியன் பேர் குன்றிய வளர்ச்சியால் பாதிக்கப்பட்டனர். 37 மில்லியன் பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருந்தனர்."
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.