‘கொரோனா குமார்’ திரைப்பட விவகாரம் - நடிகர் சிம்பு, தயாரிப்பு நிறுவனம் இடையே மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்!!
‘கொரோனா குமார்’ திரைப்பட விவகாரத்தில் நடிகர் சிம்பு மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்திற்கு இடையே மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணனை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 9
கோடியே 50 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு, 4 கோடியே 50 லட்ச ரூபாய் முன்பணமாக
கடந்த 2021ம் ஆண்டில் பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், "கொரோனா
குமார்" படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை
விதிக்க வேண்டுமென கோரி வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, நடிகர் சிம்புவுடனான ஒப்பந்தம் சமர்பிக்கப்பட்ட
நிலையில், அவருக்காக செலவிடப்பட்ட ஒரு கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் வேல்ஸ் நிறுவனம் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீதிபதி சி.சரவணன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தராக மூத்த வழக்கறிஞரை நியமித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞருக்கு பதிலாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டுமென வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர் சிம்பு மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் பட
நிறுவனத்திற்கு இடையேயான விவகாரத்தில் தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே. கண்ணனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்தியஸ்தர் பேச்சுவார்த்தைக்கு பிறகு எடுக்கப்படும் முடிவை தாக்கல்
செய்வதற்காக வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.