இந்தியாவில் 1000-ஐ தொட்ட கொரோனா தொற்று!
கடந்த 2019ல் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் தடுப்பூசி, கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பெரும் போராட்டத்திற்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வரை 1009ஐ எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் 752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகியவை அடுத்தடுத்து கடந்த ஒரு வாரத்தில் அதிக தொற்றுகளை பதிவு செய்த மாநிலங்களாக உள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கேரளாவில் 335 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மொத்த தொற்று எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மகாராஷ்டிரா மற்றும் டெல்லி முறையே 153 மற்றும் 99 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக மகாராஷ்டிராவில் 209 வழக்குகளும், டெல்லியில் 104 ஆகவும் உள்ளன.
இந்த நகரங்களைத் தொடர்ந்து குஜராத்தில் 83 வழக்குகள் பதிவாகியுள்ளன; கர்நாடகாவில் 47 வழக்குகள், உத்தரபிரதேசத்தில் 15 வழக்குகள் மற்றும் மேற்கு வங்கத்தில் 12 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுதொடர்பாக பேசியுள்ள டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தொற்று அதிகரிப்பால் யாரும் பீதியடைய தேவையில்லை என்றும், மருத்துவமனைகள் வசதிகளுடன் தயாராக உள்ளன என தெரிவித்துள்ளார்.
EDITED BY POMITHA S