சிங்கப்பூரில் மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் - பொதுமக்கள் 'மாஸ்க்' அணிய உத்தரவு!
சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தினந்தோறும் சராசரியாக 250 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், இதில் சராசரியாக தினமும் 3 பேர் தீவிர சிகிச்சைப் பரிவில் சேர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வார்டுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை மந்திரி ஆங் யே குங் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் புதிதாக கொரோனா பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடுதல் பாதுகாப்பிற்காக மேலும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.