இணையத்தில் கசிந்த #Coolie படப்பிடிப்பு காட்சிகள் - ரசிகர்களுக்கு #LokeshKanagaraj வேண்டுகோள்!
கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து சினிமா ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமாக ‘கூலி’ உருவாகி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பான் இந்திய திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் இதில் நடிக்கின்றனர். ‘தேவா’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
இந்த நிலையில் கூலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா தொடர்பான படப்பிடிப்புக் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியானதால் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
“ஒரேயொரு விடியோ பதிவு மூலம் கசியச் செய்ததன் மூலம் ஏராளமான திரைக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்களின் கடந்த இரண்டு மாத கால கடின உழைப்பு வீணாகிவிட்டது. இதேபோல படக்காட்சிகள் வெளியிடப்பட்டால், ஒட்டுமொத்த படத்தின் சுவாரசியத்தையும் கெடுத்து விடும். ஆகவே, இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென ஒவ்வொருவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! “ என லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார்.