தொடர்ந்து அத்துமீறும் சீனா - அருணாச்சலின் 30 பகுதிகளுக்கு மீண்டும் பெயர் சூட்டியதால் சர்ச்சை!
அருணாச்சல பிரதேசத்தை சார்ந்த 30 பகுதிகளுக்கு சீனா மீண்டும் பெயர் சூட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சீனாவின் உள்துறை அமைச்சகம் கடந்த வருடம் இந்தியாவின் பகுதியாக உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடும் விதமாக, அப்பகுதியில் உள்ள 11 இடங்களுக்கு சீன, திபெத்திய, பின்யின் மொழிகளில் பெயர் சூட்டி வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும் இந்த புதிய பகுதிகள் “திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்” பகுதியின் கீழ் வருவதாக சீனா அதில் குறிப்பிட்டிருந்தது. இதில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நிலப்பகுதிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள், இரண்டு ஆறுகள் போன்ற முக்கிய பகுதிகள் அடங்கும்.
இந்த நிலையில் பெயர் மாற்றும் படலத்தின் நான்காவது முறையாக ஏறத்தாழ 30 இடங்களில் பெயர்களை சீனா மாற்றி புதிய பெயர்களை நேற்று முன்தினம் வெளியிட்டு இந்தியாவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 30 பகுதிகளுக்கு புதிய பெயர் சூட்டி சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை நீண்ட காலமாக சொந்தம் கொண்டாடி வரும் சீன அரசு, அதனை தெற்கு திபெத் எனக் குறிப்பிட்டு வருகிறது. மேலும், அருணாசலப் பிரதேசத்துக்கு சீனம், திபெத் மற்றும் ரோமானிய எழுத்துகளை பயன்படுத்தி ஜாங்னனில் எனப் பெயரிட்டு அழைத்து வருகிறது.
இந்த நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 11 குடியிருப்பு கிராமங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு குறுகிய நிலப் பகுதிகளுக்கு திபெத் மற்றும் ரோமானிய எழுத்துகளை பயன்படுத்தி புதிய பெயர்களை சூட்டி ஹாங்காங் நாளிதழில் சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்தியாவில் கச்சத்த்தீவு விவகாரமும் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் சீனாவின் புதிய பெயர்கள் குறித்த அறிவிப்பு இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.