Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மத்திய அமைச்சர் ஷோபா செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்" - தமிழ்நாடு அரசு!

04:07 PM Aug 07, 2024 IST | Web Editor
Advertisement

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே,  பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களை தொடர்புப்படுத்தி தான் தெரிவித்த கருத்துகளுக்காக ஷோபா மன்னிப்பு கோரினார். தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே வெறுப்பு பேச்சு தொடர்பான திமுக-வின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய இணையமைச்சர் ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  வன்முறையைத் தூண்டும் வகையிலும், மதப் பிரச்சினைகளை உருவாக்கும் விதமாகவும் பேசியதாக தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக மத்திய இணையமைச்சர் ஷோபா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.  செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு ஒரு கருத்து தெரிவித்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக் கோரினால் தான் சரியாக இருக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.  மேலும் இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags :
Bengaluruchennai High CourtDMKMadras High CourtRameswaram CafeShobha KarandlajeTN Govtunion minister
Advertisement
Next Article