நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சு; மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு!
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியானது. இதில், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், மன்சூர் அலி கான் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார்.
இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு அறிவுறுத்துகிறோம். இது போன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான காவல்துறையின் செய்தி குறிப்பில், நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா கிருஷ்ணன் என்பவர் குறித்து கண்ணியத்தை குறைக்கும் வகையில் மிகவும் அநாகரிகமான முறையில் அவமானப்படுத்தி, பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் (X-Twitter) பரவியது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 21.11.2023 அன்று நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 இதச ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.